search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேதாரீஸ்வர விரதம்"

    கேதாரீஸ்வர விரதம் கடைப்பிடித்து உமா மகேஸ்வரரை வழிபட தாம்பத்திய ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். குடும்பத்தில் சுபிட்சம் மேலோங்கும்.
    பிருங்கி என்றொரு முனிவர், தீவிரமான சிவபக்தர். ஒருமுறை, திருக்கயிலையில் அம்மையும் அப்பனும் அமர்ந்திருக்க, பிருங்கி முனிவரோ வண்டாக வடிவெடுத்து, ஸ்வாமியை மட்டும் வலம் வந்து வணங்கிச் சென்றார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை, பிருங்கி முனிவரின் தேக ஆற்றலை நீங்கச் செய்தாள். அவருக்கு சிவனார் ஊன்றுகோல் கொடுத்து திருவருள் புரிந்தார்.

    இதையடுத்து, தான் வேறு சிவன் வேறு அல்ல என்பதை உலகத்தவருக்கு உணர்த்த விரும்பிய அம்பிகை, அதன் பொருட்டு பெரும் தவம் செய்ய முடிவெடுத்து பூமிக்கு வந்தாள். வனம் ஒன்றில் கெளதம மஹரிஷியைச் சந்தித்தாள். அவரிடம் நடந்த யாவற்றையும், தனது விருப்பத்தையும் விவரித்து, விருப்பம் நிறைவேற வழிகேட்டாள். அவளுக்கு கேதாரீஸ்வர விரத மகிமையை எடுத்துக் கூறிய கெளதமர், அந்த விரதத்தைக் கடைப்பிடித்து சிவனாரை வழிபடும்படி கூறினார். அம்பிகையும் அதன்படியே விரதம் இருந்து, சிவனாரின் தேகத்தில் இடபாகத்தை பெற்றாள்.

    அவள் வழியில் நாமும் கேதாரீஸ்வர விரதம் கடைப்பிடித்து உமா மகேஸ்வரரை வழிபட தாம்பத்திய ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். குடும்பத்தில் சுபிட்சம் மேலோங்கும்.

    இந்த விரதத்தை எப்போது கடைப்பிடிப்பது?

    இதுகுறித்து கெளதமுனிவர் உமையவளுக்குக் கூறிய விவரம்: ‘‘புரட்டாசி மாத வளர் பிறை தசமி திதியில் தொடங்கி, ஐப்பசி மாத தேய்பிறைச் சதுர்த்தசி அல்லது அமாவாசை வரை 21 நாட்கள் இந்த விரதத்தை நடத்த வேண்டும். சிவபெருமானைக் குறித்துச் செய்யப்படும் இந்த விரதத்தை பக்தியுடன் செய்தால், ரிஷப வாகனனான ஸ்வாமி காட்சி தருவார். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்!” என்றார்.

    வழிமுறை: பூஜை செய்ய வேண்டிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு, தலை வாழையிலையில் அட்சதையைக் கொட்டிப் பரப்பி, அதன் மேல் பூரண கும்பத்தை வைத்து அலங்கரிக்க வேண்டும். கும்பத்தில் கேதாரீஸ் வரரை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

    21 இழைகள் - 31 முடிச்சுகள் கொண்ட நோன்புக் கயிறை, அந்தக் கும்பத்தின் மேல் சார்த்தி 21 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். பூ, பழம் முதலான பூஜைப் பொருட்கள் 21 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். வேத வல்லுநர்கள் 21 பேரை வரவழைத்து, அவர்களைக் கொண்டு பூஜை செய்து வழிபட வேண்டும். மனதில் உள்ள விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் விரதம் இது.
    ×